சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா

 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள் சந்தன டிப்போ பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர். அந்த ரேஷன் கடையில் அதிகப்படியான ரேஷன் கார்டுதாரர்கள் இருந்ததால் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை உரிய நேரத்தில் பெற முடியாமல் தவிர்த்து வந்ததால் ராஜீவ் நகர் பகுதியில் கூடுதலாக புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து 11-வது வார்டு உறுப்பினர் சரவணன் நகராட்சி தலைவர் ஆர். ஜானகிராமசாமியிடம் புதிய ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அப்பகுதியில் புதிய ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு கொமாரபாளையம் பிரிவு பகுதியில் 805 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் முழுநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர். ஜானகிராமசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி இளங்கோ, சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வி.சி.வரதராஜ், சங்கத்தில் மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெகநாதன், சத்தியமங்கலம் நகராட்சி துணை தலைவர்  ஆர்.நடராஜ்,சத்தி நகராட்சி 11 வது வார்டு உறுப்பினர் சரவணன், கூட்டுறவு சங்க மேலாளர் முருகேஷ் , கொத்துக் காடு சிவா மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments