விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சி - வாகைக்குளம் பகுதியில் விளை நிலத்திற்குள் அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அடிக்கடி,சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் P.வாகைக்குளம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் P.வாகைக்குளம் பகுதியில் இன்று மீண்டும் அரசு டாஸ்மாக் கடை திறப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அருப்புக்கோட்டை ASP கருண் காரட்,திருச்சுழி டி.எஸ்.பி.,ஜெகநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இந்த நிலையில் P.வாகைக்குளம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியதால் மது பிரியர்கள் மகிழ்ச்சியடைந்து ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று மதுபான பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொங்கியெழுந்த பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில் P.வாகைக்குளம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


0 Comments