அனைத்து தமிழர்களையும் துண்டுத் துண்டாக வெட்ட வேண்டும்..... இலங்கை முன்னாள் ஆளுநர் அடாவடி..... - MAKKAL NERAM

Breaking

Saturday, October 28, 2023

அனைத்து தமிழர்களையும் துண்டுத் துண்டாக வெட்ட வேண்டும்..... இலங்கை முன்னாள் ஆளுநர் அடாவடி.....

 


சிங்கள பகுதிகளில் உள்ள தமிழர்களைத் துண்டுத் துண்டாக வெட்ட வேண்டுமென சிங்கள துறவியும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இலங்கையின் இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடுகளை உடைத்த கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு வந்த சிங்கள மத துறவியும், முன்னாள் ஆளுநருமான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதனைப் பார்வையிட்டார்.


பின்னர் பேசிய அவர், ‘’ மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மயானம் கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எனது தாயின் சமாதி அமைந்துள்ளது. இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதுவே இனவாதம். நாம் இனவாதத்தை தூண்டும் தேரர்கள் அல்ல. நாம் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்துள்ளோம். நாம் யாருடைய மயானங்களையும் அழிக்கவில்லை.



எனது தாயின் சமாதிக்கு அடுத்ததாக இந்துக்களின் மயானம் உள்ளது. அதனைத் தாண்டி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மயானங்கள் உள்ளன. ஏன் அவற்றை யாரும் கனரக இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யவில்லை? ஏன் சிங்களவர்களின் மயானத்தை மட்டும் சுத்தம் செய்கிறீர்கள்? சாணக்கியன் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.


இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென நான் இலங்கை அதிபர், காவல் துறையினர் உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் துண்டுத் துண்டாக வெட்டுவார்கள்’’ என ஆவேசமாக பேசியுள்ளார்.



அம்பிட்டியின் இந்த பேச்சு இலங்கையில் கடும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுத் தொடர்பாக அங்குள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் எம்.பிக்கள் அம்பிட்டிய மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனே கைது செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment