திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரைப்பேட்டையில் அரசு மேல் நிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கவரப்பேட்டை தலைமை ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார். முன்னாள் ஆசிரியர்கள் செல்வம் ஆறுமுகம் சுப்ரமணியம் பழனி அண்ணாமலை குழலி பானுரேகா சிறப்புரை ஆற்றினார்கள்.
1998 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 12 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்சப் குழு மூலம் ஒன்றிணைக்கப்பட்டு குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் 27 ஆண்டுகளின் முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளிக்கு வந்த நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கியும், ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 27.வருடங்களுக்கு பிறகு சந்தித்த தங்களுடைய பள்ளி தோழர்கள், தோழிகளுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சால்வை, மாலை அணிவித்து ஆசி பெற்றனர்.
முன்னாள் மாணவர்களும், ஆசிரிய பெருமக்களும் பள்ளி நாட்களில் நடைபெற்ற தங்களின் பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர். பள்ளியில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது மேலும் அப்பள்ளி வகுப்பறையில் வண்ணம் பூசி தரப்பட்டதும் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது முன்னாள் மாணவர்கள் 60 ஆயிரம் மதிப்புள்ள பள்ளிக்கு குழாய் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை செய்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து குழு புகைப்படம் மற்றும் கேடயங்கள் வழங்கினார். இந்த விழாவை முன்னாள் மாணவர்கள் ஏடூர் இரவீந்திரன், கணேசன், முரளிகிருஷ்ணன், கோதண்டராமன், சுரேந்தராமன், தங்கராசு உள்ளிட்ட மாணவர்கள் ஒருங்கிணைத்துக் குழு சிறப்பாக நடத்தினர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment