மட்டமான மட்டன் பிரியாணி வழங்கிய பிரபல ஹோட்டலுக்கு சீல் - MAKKAL NERAM

Breaking

Wednesday, November 15, 2023

மட்டமான மட்டன் பிரியாணி வழங்கிய பிரபல ஹோட்டலுக்கு சீல்

 


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல நிறுவனத்தின் பெயரை கொண்ட ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை பகுதியைச் சேர்ந்த லாயிஸ்கிறிஸ்டினா (வயது 40) என்பவர் மட்டன் பிரியாணி பார்சல் வாங்கி வீட்டிற்கு எடுத்துச்சென்று சாப்பிட்டபோது, அந்த பிரியாணி கெட்டுப்போயிருந்தது.


உடனே அந்த பிரியாணியை, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எடுத்துச்சென்று காண்பித்து ஊழியர்களிடம் முறையிட்டு உள்ளார். அதற்கு ஓட்டல் ஊழியர்கள், சரிவர பதில் கூறாமல் அலட்சியம் செய்ததால் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இதை அறிந்ததும் அந்த ஓட்டல் முன்பு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். இதுசம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.இதையடுத்து நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது அங்கு 5 கிலோ பிரைட் ரைஸ், 3 லிட்டர் சிக்கன் கிரேவி, 1 லிட்டர் கத்திரிக்காய் சால், 10 வேக வைத்த முட்டைகள் ஆகியவை முந்தைய நாள் சமைக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்ததும், இதுதவிர 30 அழுகிய முட்டைகள், 30 கிலோ நாள்பட்ட சிக்கன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இதையடுத்து கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர். மேலும் அந்த ஓட்டலில் நாள்பட்ட உணவுப்பொருட்களை கொண்டு உணவு சமைத்து விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்த அதிகாரிகள், தற்காலிகமாக அந்த ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment