தெலங்கானாவில் இன்று காலை நேரிட்ட ஒரு கோர விபத்தில், இந்திய விமானபடையின் 2 விமானிகள் பலியாகி உள்ளனர். பயிற்சி விமானத்தில் பறந்தபோது, அந்த விமானம் விபத்துக்கு ஆளாகி, இந்த சோகம் சம்பவித்திருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் திண்டக்கல் என்ற இடத்தில் உள்ள விமானப்படை அகாடமியின் வழக்கமான பயிற்சி நடவடிக்கையின்போது இந்த விபத்து நேரிட்டிருக்கிறது. இன்று காலை பயிற்சிக்காக, இந்திய விமானப்படையின் 2 பைலட்டுகளுடன் கிளம்பிய பயிற்சி விமானம் எதிர்பாரா வகையில் விபத்துக்குள்ளானது. காலை 8.55 மணிக்கு இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது.
இதில் விமானத்தில் பயணித்த 2 விமானிகளும் பரிதாபமாக இறந்தனர். இருவரில் ஒருவர் பயிற்சி விமானி, மற்றொருவர் பயிற்றுநர் எனத் தெரிய வருகிறது. பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்ததில் தரையில் மோதி, வெடித்துச் சிதறி இருக்கிறது. இந்த விபத்தின் பின்னணியிலான காரணங்களை அறிய விமானப்படை உயரதிகாரிகள் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய விமானப்படை சார்பில் வெளியான தகவலில், “ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து, வழக்கமான பயிற்சி நடவடிக்கைக்காக பறந்த பிலட்டஸ் பிசி 7 எம்கே 2 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்ததை இந்திய விமானப்படை வருத்தத்துடன் உறுதி செய்கிறது.
பொதுமக்களின் உயிர் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய இந்திய விமானப்படையால் உரிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் விமானி மற்றும் ஒரு மூத்த பயிற்றுநர் என இந்திய விமானப்படையின் 2 விமானிகள், விமான விபத்தில் பலியாகி இருப்பது நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment