• Breaking News

    மதுரை அருகே பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா கோலாகலம்

     


    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த செம்மினிப்பட்டியில் ஆண்டி பாலகன் என்ற கோயில் உள்ளது. இதற்குச் சொந்தமானது பிரம்மாண்டமான செம்மினி கண்மாய். இதன் மூலம் செம்மினிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.


    வருடந்தோறும், மார்ச் மாதம் இந்த கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழா நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி விவசாயப் பணிகள் முடிந்த நிலையில் கண்மாயில் மீன்பிடித் திருவிழா இன்று நடத்தப்பட்டது.



    இதனை முன்னிட்டு, மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்-சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் நேற்று இரவு முதலே கண்மாய் கரையில் திரண்டனர்.


    இன்று காலை ஊர் பெரியவர்கள் கொடியசைத்ததுடன் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் போட்டிப் போட்டுக் கொண்டு மீன்களைப் பிடித்தனர். இதில் கட்லா, உளுவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. சிலருக்கு குறைந்த அளவு மீன்கள் கிடைத்தன.


    மீன்களைப் பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். மீன்பிடித் திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    No comments