• Breaking News

    வைரலாகும் 'பருத்திவீரன்' படத்தின் தணிக்கை சான்றிதழ்


     'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



    இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'பருத்தி வீரன் பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் நான்.



    அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என்று தெரிவித்திருந்தார்.



    இதற்கிடையே நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த அறிக்கையை விமர்சித்து பதிவிட்டனர். எந்த பொது வெளியில் குற்றம் சாட்டினாரோ அதே பொது வெளியில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.


    இந்நிலையில் பருத்தி வீரன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில் படத்தின் தயாரிப்பாளர் பெயர் இடம்பெரும் இடத்தில் இயக்குனர் அமீரின் பெயரும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம்பெரும் இடத்தில் டீம் ஒர்க் புரொடக்சன் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. 



    இதனை பார்த்த ரசிகர்கள் தணிக்கை சான்றிதழில் ஞானவேல்ராஜாவின் பெயரும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாததால், அமீர்தான் படத்தின் தயாரிப்பாளரா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் இந்த புகைப்படத்திற்கு ஞானவேல்ராஜா விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே தற்போது பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான மற்றுமொரு பத்திரமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பத்திரத்தில் பருத்திவீரன் படத்தின் தணிக்கை சான்றிதழ் பெற அமீரின் பெயரை பயன்படுத்த ஆட்சேபனை இல்லை என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா கையெழுத்திட்டுள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் யார்..? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    No comments