சென்னை மேயர் பிரியாவை முற்றுகையிட்ட பொதுமக்கள்......
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் சென்னை பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், மக்கள் கடும் விரக்திக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை மாநகர மேயர் பிரியாவின் சொந்த வார்டில் தொடர்ந்து இதுவரை மின்சார விநியோகம் சீர்செய்யப்படாததால் அப்பகுதி மக்கள், மேயர் ப்ரியாவை முற்றுகையிட்டு கேள்வி ஆவேசமாக எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை பெரம்பூர் மற்றும் திருவிக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன்தாஸ் சாலையில் வசித்து வரும் மேயர் பிரியாவின் இல்லத்தை 71வது வார்டு பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். திடீரென பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்டு சற்றும் அசராத மேயர் பிரியா பொதுமக்களிடம் நிலைமையை விளக்கி கூறினார். மின்சாரம் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், ஒருசில இடங்களில் இன்னும் மின்சார விநியோகம் சீர்செய்யப்படாததால், பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை சமாளிப்பதே திமுகவினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக தங்களுக்கு மின்சாரம், குடிநீர் இல்லை என்றும் கழிவுநீர் செல்ல வழி இல்லை என்றும் மழைநீர் அகற்றப்படவில்லை என்றும் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட சென்ற போது ஆசிரியை ஒருவர் ஆவேசமாக அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பிய நிலையில், வேளச்சேரி பகுதிகளில் எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள், அமைச்சர் நேரு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட சென்ற போதும் ரூ.4,000 கோடி குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள். உணவு வழங்க சென்றிருந்த பாஜக தலைவர் அண்ணாமலையையும் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து, திருப்பியனுப்பினார்கள். சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த தொகுதி.. சொந்த வார்டு இது... இந்த தெருவின் லட்சணத்தைப் பாருங்க என்று சைதாப்பேட்டையின் அவல நிலை குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு பக்கம் மீட்பு பணிகளில் இரவு பகலாக மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தாலும், நிலைமை இன்னும் சீரடைந்து கட்டுக்குள் வராததால், திமுக அமைச்சர்களிடம், தலைவர்களிடமும் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
No comments