இந்த முறையாவது நீடிக்குமா..... பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்.......

 


பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், கடந்த 2020-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் பாஜக ஆதரவுடன் முதல்வரானார்.


இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு, பாஜக தனது கட்சியை உடைக்க முயல்வதாகக்கூறி, அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடனான மகா கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வரானார். இந்த கூட்டணி சார்பில் ஆர்ஜேடி-யின் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.


பின்னர் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என சூளுரைத்து பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தார் நிதிஷ்குமார்.


மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்நிலையில் பீகாரில் ஆர்ஜேடி-க்கும், நிதிஷ்குமாருக்கும் சச்சரவு ஏற்பட்டது.


இதனால் கடந்த சில நாள்களாக அதிருப்தியில் இருந்து வந்த நிதிஷ்குமார், திடீர் திருப்பமாக பாஜக அணிக்கு மாறினார். மேலும், இன்று காலை, ஆர்ஜேடி-தயவுடனான முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது பாஜக ஆதரவுடன் 9வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.


நிதிஷ்குமார் 2000-ம் ஆண்டில் முதல் முறையாக முதல்வரானார். அப்போது அவர் ஆர்ஜேடி-க்கு எதிராக அரசியல் செய்தார். அவரது பிரச்சாரம் லாலுவை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கடந்த 2013ல் நிதீஷ்குமார் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து பிரிந்தார்.2015 தேர்தலில் ஆர்ஜேடி உடன் இணைந்தார்.


2017ம் ஆண்டில், நிதீஷ்குமார் ஆர்ஜேடி உடனான உறவை துண்டித்து மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு சென்றார். 2022-ம் ஆண்டில் மீண்டும் ஆர்ஜேடி கூட்டணியில் இணைந்தவர் தற்போது அதிலிருந்து வெளியேறி என்டிஏ கூட்டணிக்கு தாவியுள்ளார்.

Post a Comment

0 Comments