பாஜகவில் இணைகிறாரா காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.....? வரும் 27ம் தேதி முற்றுப்புள்ளி......

 

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ-வான விஜயதரணி பாஜகவில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே விளவங்கோடு தொகுதியில் மீண்டும் விஜயதரணிக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்புகள் வெடித்தன. இதையடுத்து, தனக்கு சீட் இல்லை என்றால் மாற்றுக் கட்சிக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்ற செய்தியை கசியவிட்டார் விஜயதரணி.

இதையடுத்து அதிமுகவும் பாஜகவும் போட்டிபோட்டுக் கொண்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தின. அதிமுக தரப்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பா எம்எல்ஏ அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாஜக அவருக்காகவே விளவங்கோடு தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்காமல் காத்திருந்தது. ஆனால், இரண்டு கட்சிகளிடமும் பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டே இருந்தார் விஜயதரணி. அதேசமயம், தரணி தடாலடியாக எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக உள்ளூர் காங்கிரஸார் எதிர்ப்பையும் மீறி அவருக்கே மீண்டும் சீட் கொடுத்தது காங்கிரஸ் தலைமை.

கடந்த தேர்தலில் எதிர்ப்புகளை மீறி விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றுவிட்டாலும் காங்கிரஸார் விஜயதரணியை கண்டுகொள்ளாமலேயே இருந்தனர். சொந்த மாவட்ட காங்கிரஸார் அவரை உதாசீனப்படுத்தும் நோக்கில் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இம்முறை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சிக்குள் பேசி இருக்கிறார் விஜயதரணி. ஆனால், சிட்டிங் எம்பி-யான விஜய் வசந்தை தவிர்த்துவிட்டு அவருக்கு சீட் தரமுடியாது என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.

இதையடுத்து அடுத்த அஸ்திரமாக மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு துண்டு போட்டிருக்கிறார் விஜயதரணி. அதற்கும் சரியான பதில் இல்லாததால் ஒரேயடியாக காங்கிரஸை விட்டு கிளம்பிவிடும் யோசனைக்கு அவர் போனதாகச் சொல்கிறார்கள். விஜயதரணியின் எண்ண ஓட்டத்தை அறிந்த பாஜகவினர் அவரை பாஜகவுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.தற்சமயம் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் விஜயதரணி. பாஜக தலைவர்களை சந்திப்பதற்காகவே அவர் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். தன்னை தொடர்பு கொண்டு பேசும் செய்தியாளர்களிடம், பாஜகவில் இணையப் போவதாக வரும் செய்திகளுக்கு ஆமாம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து வருகிறார் தரணி.

“விஜயதரணி பாஜகவில் இணைவது உறுதியாகிவிட்டது. 27-ம் தேதி பல்லடத்தில் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவரது முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைகிறார். அதற்கு முன்னதாக செய்திகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அமைதிகாக்கிறார்” என்கிறார்கள் பாஜக தரப்பில்.விஜயதரணிக்கு நெருக்கமானவர்களோ, “காங்கிரஸ் கட்சி மீது விஜயதரணி வருத்தத்தில் இருப்பது உண்மைதான். அதற்காக அவர் பாஜகவுக்குப் போவாரா என்பது தெரியாது. இப்போது அவர் டெல்லியில் தான் இருக்கிறார். ஆனால், பாஜக தலைவர்களைச் சந்திப்பதற்காக அல்ல. தனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக அவர் டெல்லியில் இருக்கிறார்” என்கிறார்கள்.


எது உண்மையோ... 27-ம் தேதி தெரிந்துவிடும்!

Post a Comment

0 Comments