தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...... சென்னை வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே......

 


மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான உத்தேச தேதி வரும் ஏப்ரல் 16 என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் குழுக்கள் அமைத்து மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.


அகில இந்திய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகள் இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இப்படி இந்தியா கூட்டணிகளுக்குள் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக இடையிலான கூட்டணி இதுவரை பலமாகவே உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அமைக்கப்பட்டு காங்கிரஸ் தேர்தல் குழு, திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் தொகுதி எண்ணிக்கை மற்றும் சென்னையில் ஒரு தொகுதி என்ற எதிர்பார்ப்புகள் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படாமல் உள்ளது.


திமுக தரப்பில் ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 6ம், புதுச்சேரி என 7 தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அடுத்தகட்ட பேச்சு வார்த்தை வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 13ம் தேதி சென்னை வருகிறார். அவர், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments