பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டி....? திமுக எம்.பி- செந்தில்குமார் பேச்சு......

 


தருமபுரி  தொகுதி திமுக எம்.பி- செந்தில்குமார்  சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. மிக முக்கிய விவகாரங்களில் கூட சாதாரணமாக கருத்துச் சொல்ல தயங்க மாட்டார். அதன் காரணமாக மக்களவையில் கூட அவர் மன்னிப்பு கேட்க நேர்ந்தது. அப்படிப்பட்டவர் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில்  "பிரதமர் மோடி இந்த முறை கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிடுகிறார்" என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த பேட்டியில்,  "பிரதமர் மோடி இந்தமுறை நிச்சயம் தமிழ்நாட்டில் தான் போட்டியிடப் போகிறார்,  அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிட உள்ளார்,  இது எனக்கு டெல்லியில் இருந்து கிடைத்த தகவல் என்று உறுதிபட  தெரிவித்துள்ளார்.  மேலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தான் அதிமுக இடம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.சி.வி சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் இந்த மூவரைத் தவிர மற்ற அனைவருக்கும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தான் விருப்பம்.  அமித் ஷா போன்ற அதிகாரம் வாய்ந்த  அமைச்சர் அதிமுகவுக்கான கூட்டணி கதவுகள் திறந்து இருக்கிறது என்றெல்லாம்  சாதரணமாக வார்த்தைகளை விட மாட்டார்கள், எங்களோடு வராமல் எங்கே செல்வார்கள் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் தான் டெல்லி வட்டாரம் இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார். 


தமிழ்நாட்டில் பாஜக ஒரிரு இடங்களில் கூட வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கும் நிலையில் நீலகிரி  மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருந்த எல். முருகன் கூட மாநிலங்களவை பக்கம் சென்று விட்டார். இந்த நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்று  செந்தில்குமார் கூறியிருப்பது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது தெரியவில்லை.அதேபோல பாஜகவுக்கான கூட்டணிக் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன என்று அமைச்சர் ஜெயக்குமாரும்,  அதிமுகவோடு கூட்டணி கிடையாது என்று உறுதியாக எடப்பாடியாரும்  சொல்லியிருக்கும்  நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என்று செந்தில்குமார் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Post a Comment

0 Comments