சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்......

 


தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை, அதிமுக கோரிக்கையை ஏற்று மாற்றப்பட்டுள்ளது.


அதிமுகவில் நடந்த உட்கட்சி பிரச்சினை காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.  சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில்  உள்ள துணைத் தலைவருக்கான இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அந்த இருக்கையை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகரிடம் அதிமுக சார்பில் இதுகுறித்து பல முறை கடிதமும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சபாநாயகர் இதனை கண்டு கொள்ளவில்லை. 


இந்த சூழ்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று  நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 4 முறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்திருப்பதாகவும், பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார். 


மேலும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை என்பது நீண்ட நாட்களாக உள்ள மரபு எனவும், பல ஆண்டுகளாக உள்ள மரபை சபாநாயகர் நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் நீண்ட நாட்களாக அவையில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.


அதையடுத்து  சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்தநிலையில் இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


முன்னாள் சபாநாயகர் தனபால் அமர்ந்திருக்கும்  இரண்டாவது வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு  இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று அதனை நிறைவேற்றிய சபாநாயகருக்கு அதிமுகவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments