கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்துகள் இயக்கம், பேருந்து கால அட்டவணை, ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் வருகை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பயணிகளிடம் பேசிய போது, கிளாம்பாக்கத்தில் இருந்து சேலத்திற்கு செல்வதற்கு, கோயம்பேட்டில் இருந்து வசூலிக்கப்பட்ட அதே தொகையை வசூலிக்கப்படுவதாகவும், அதனை குறைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், ஏற்கெனவே பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அப்போதே நானும் அமைச்சர் சேகர்பாபுவும் சில கருத்துக்களை எடுத்துரைத்தோம். அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட நிலையில் பெரிய பிரச்சினைகள் எல்லாம் சரிசெய்து விட்டோம். குறைகளை யார் சொன்னாலும் சரி செய்வோம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் காலதாமதமாக வந்த காரணத்தினால் மக்கள் கோபப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.” என்றார்.
மேலும், “அட்டவணைப்படி பேருந்துகள் இயங்கி வருகிறது. 12 மணிக்கு பிறகு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். பேருந்துகளை பக்கத்தில் உள்ள பணிமனைகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த நேரத்தில் ஓட்டுநர், நடத்துநர் எங்கிருந்து வருவார்கள்?. அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது ஆபத்தானது என்பதால் அந்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பயணிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 12 மணிக்கு மேல் பொதுவாக பேருந்துகள் மிக குறைவாகவே இயக்கப்பட்டு வருகிறது. இது பல ஆண்டு காலமாக இருந்து வரும் நடைமுறை. எனவே இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைக்கு 80% பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 740 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோன்று ஏற்கனவே 361 அதிவிரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 1,221 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

0 Comments