• Breaking News

    சமாஜ்வாடி கட்சியின் கொறடா ராஜினாமா...... அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்.....

     


    உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் பாஜக 7 உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி 3 உறுப்பினர்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். ஆனால் பாஜக 8வது வேட்பாளரையும் களத்தில் இறக்கியதால் அங்கு தேர்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

    இக்கூட்டத்தை 8 எம்எல்ஏ-க்கள் புறக்கணித்ததால் சமாஜ்வாடி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே எம்எல்ஏ-க்கள் ஆப்சென்ட் விவகாரத்திலிருந்து மீளாத கட்சி தலைமைக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக சமாஜ்வாடி கொறடாவும், முன்னணி தலைவருமான மனோஜ்குமார் பாண்டே ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.403 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் பாஜக மற்றும் சமாஜ்வாதி முறையே 252 எம்எல்ஏ-க்களையும் 108 எம்எல்ஏ-க்களையும் கொண்ட இரண்டு பெரிய கட்சிகளாகும். சமாஜ்வாடி கட்சியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 இடங்களைக் கொண்டுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனேலால்) 13 இடங்களையும், நிஷாட் கட்சி 6 இடங்களையும், ஆர்எல்டி 9 இடங்களையும், எஸ்பிஎஸ்பி 6 இடங்களையும், ஜனசத்தா தளம் லோக்தந்த்ரிக் 2 இடங்களையும், பகுஜன் சமாஜ் 1 இடத்தையும் கொண்டுள்ளன. 4 இடங்கள் காலியாக உள்ளன.

    இச்சூழலில் 8 எம்எல்ஏ-க்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது, கொறடா ராஜினாமா போன்றவை சமாஜ்வாடி கட்சிக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    No comments