வயநாடு தொகுதிக்கு வந்த ராகுல் காந்தி..... வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்......

 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புலி ஒன்று விவசாயி ஒருவரை அடித்துக் கொன்றது. இதைத் தொடர்ந்து அந்த புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தற்போது அது திருச்சூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பேலூர் பகுதியில் இருந்து ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனத்தில் விடப்பட்ட யானை ஒன்று கேரள மாநிலம் வயநாடு பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானை மணந்தவாடி பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு டிராக்டர் ஓட்டுநர் ஒருவரை அந்த யானை மிதித்து கொன்றது. இதையடுத்து இந்த யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் வனத்துறையினரின் கண்களுக்கு சிக்காமல் யானை தொடர்ந்து குடியிருப்புகளின் அருகில் உள்ள வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குருவா தீவு பகுதியில் சுற்றுலா கைடு பால் என்பவரை காட்டு அணைகள் மிதித்துக் கொன்றது. இந்த சம்பவத்தை அடுத்து வயநாடு பகுதியில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.திரளான பொதுமக்கள் அங்கு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு வயநாடு தொகுதிக்கு திரும்பினார். இன்று காலை அவர் சுற்றுலா கைடு, பாலின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ராகுல் காந்தி செல்லும் வழியில் அவரது காரை மறித்த நபர் ஒருவர், தங்களது குறைகளை எம்.பி., என்ற முறையில் கேட்க வேண்டும் எனக் கூறி முழக்கங்களை எழுப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி புலியால் உயிரிழந்த பிரஜீஷின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்த உள்ளார்.

இதனிடையே ராகுல் காந்தியிடம் பிரச்சனையின் முழு வீரியத்தை தெரிவிக்காமல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரை அழைத்து வந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் தொடர்ந்து உயிர்களை இழந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டியது மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் என்ற முறையில் ராகுல் காந்தியின் கடமை எனவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராகுல் வருகையால் வயநாடு தொகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Post a Comment

0 Comments