அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை...... வைரலாகும் திண்டுக்கல் சீனிவாசனின் வீடியோ..... - MAKKAL NERAM

Breaking

Friday, February 2, 2024

அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை...... வைரலாகும் திண்டுக்கல் சீனிவாசனின் வீடியோ.....



அடிக்கடி வாய்தவறி குண்டக்க மண்டக்க எதையாவது பேசிவிட்டு அதன்பிறகு நாக்கைக் கடித்துக்கொள்பவர் முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்படித்தான் இப்போது, “அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை” என்று பேசி மீடியாக்களுக்கு கன்டென்ட் கொடுத்திருக்கிறார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.


பட்டியலினத்துப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது அதிமுக.


இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். அதன்படி, திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.


அப்போது அவர், திமுகவை மட்டுமின்றி பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஓபிஎஸ் மற்றும் பாஜகவின் ஆதரவால் தான் எடப்பாடி பழனிசாமியால் ஆட்சி செய்ய முடிந்ததாக ஓபிஎஸ் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த அவர், ”எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தால் வேட்டி கட்டி வெளியே வர முடிந்தது. ஆனால் இப்போது, தெய்வம் தந்த தண்டனையால் அவரால் அதிமுக வேட்டியைக்கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் பேசுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள வேண்டாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே, ‘மோடியா... லேடியா?’ என்று பிரச்சாரம் செய்து தேர்தலை சந்தித்தவர் ஜெயலலிதா. அப்போது 37 எம்பி-க்களை தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவுக்கு கொடுத்தனர். இந்த முறை எடப்பாடி தலைமைக்கு 39 எம்பி-க்கள் கிடைக்கும். தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டுக்கு நல்லது செய்பவர்களுக்கு தான் ஆதரவு கொடுப்போம். கெடுதல் செய்வோரை எதிர்ப்போம்” என்றார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரிக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு உள்ளார்” என்று திண்டுக்கல்லார் திகைக்காமல் சொன்னார். இதைக் கேட்டு சுற்றி இருந்த அதிமுகவினர் பேரதிர்ச்சி அடைந்தனர். ‘அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை’ என்று சீனிவாசன் பேசிய அந்த சிரிப்பு வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment