புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தாந்தாணி ஊராட்சி செட்டிக்காடு கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஸ்ரீ மாயன்பெருமாள் கோயில் திடலில் 2 ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமர்சியாக நடைபெற்றது. இதனையடுத்து அரசின் விதிமுறைப்படி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியின் முன்னதாக மாயன் பெருமாள் கோயில் காளை அவிழ்க்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. இதற்க்காக அமைக்கப்பட்ட வட்ட வடிவிலான களத்தில் மதுரை, சிவகங்கை, தின்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 12 காளைகளும், 12 குழுக்களை சேர்ந்த 100 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வடமாடு மஞ்சுவிரட்டு 12 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றிலும் 9 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். களத்தில் கயிற்றால் கட்டப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து காளையர்களுக்கு போக்கு காட்டி திமிலை சிலிர்த்தப்படி சீறிப்பாய்ந்த காட்சி காண்போரை கவர்ந்தது. இதை காளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கியும், அடக்க முயன்ற காட்சிகளும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளையர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வடமாடு மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டை அறந்தாங்கி மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசர், சிலட்டூர் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், காவல் ஆய்வாளர் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

0 Comments