தேனி: வெளிநாட்டில் டாக்டர் வேலையை விட்டுவிட்டு வெள்ளரிக்காய் விற்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்
வெளிநாட்டில் டாக்டர் வேலை பார்த்து வந்தவர், அந்த வேலையை விட்டு விட்டுவெளிநாடுகளுக்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்ததில் பணத்தை இழந்ததால் டாக்டர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த நடராஜ்குமாருக்கு 44 வயது ஆகிறது. இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ படிப்பிற்காக ரஷியா சென்றிருக்கிறார். அங்கு மருத்துவம் படித்து முடித்த அவர், ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலேயே கிளினிக் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். பின்னர் தன்னுடன் மருத்துவ கல்லூரியில் படித்த மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரஷியாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். டாக்டர் நடராஜின் வாழ்க்கை ரஷ்யாவில் நன்றாக போய் கொண்டிருந்தது.
அப்போது ரஷ்யாவைச் சேர்ந்த சில வியாபாரிகள், தமிழ்நாட்டில் இருந்து வெள்ளரிக்காய் ஏற்றுமதி தொழில் செய்து வந்ததை கண்டார். அவர்களுடன் நாட்ராஜகுமாருக்கு பழக்கம் கிடைத்தது. இதில் வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைப்பதை கண்ட நடராஜ்க்கு வெள்ளரிக்காய் தொழில் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனால் தானும் வெள்ளரிக்காய் ஏற்றுமதி தொழில் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக அங்குள்ள நண்பர்கள் மற்றும் வியாபாரிகளுடன் பேசிவிட்டு நேரடியாக சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பத்திற்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். அதன்பின்னர் தனது டாக்டர் தொழிலை விட்டுவிட்டு ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு வெள்ளரிக்காயை ஏற்றுமதி செய்து வந்தார். அதுவும் நன்றாகவே சென்றது. ஆனால் எல்லாமே உக்ரைன் ரஷ்யா போர் வரை தான்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்ரைனில் போர் தீவிரமானது. இதனால் டாக்டர் நடத்தி வந்த வெள்ளரிக்காய் ஏற்றுமதி தொழில் பாதித்தது.
இது ஒருபுறம் எனில் வெளிநாடுகளுக்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்ததற்கான பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வெள்ளரிக்காய்களை கொடுத்த வியாபாரிகள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கடன் வாங்கி அவர் பணத்தை திரும்ப கொடுத்தார். ரஷ்யாவில் சில பகுதிகளில் போர் முடிந்த பிறகும் ஏற்றுமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காய்களுக்கான பணம் வரவில்லை. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகினார். மேலும் தனது மனைவி மற்றும் பெற்றோரிடம் அடிக்கடி இதுகுறித்து பேசி வேதனைப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள அறைக்கு நாட்ராஜகுமார் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மரியா அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நடராஜகுமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து மரியா மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் நடராஜகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெள்ளரிக்காய் ஏற்றுமதியில் பணத்தை இழந்ததால் டாக்டர் உயிரை மாய்த்துக் கெண்ட செய்து கொண்ட சம்பவம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments