பிரதமர் மோடியுடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பேன் - ஓ.பன்னீர்செல்வம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, March 27, 2024

பிரதமர் மோடியுடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பேன் - ஓ.பன்னீர்செல்வம்

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் சுயேச்சையாக போட்டியிட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேற்று தங்கச்சிமடம் சூசையப்பர் ஆலய வளாகத்தில் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து மீனவர்கள் அவரிடம் இலங்கை சிறையில் தண்டனை விதித்து அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள், பிடிபட்ட 53 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய படகுகளை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது மீனவர்கள் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, இலங்கை மந்திரி செந்தில் தொண்டைமான் உள்ளிட்டவர்களிடம் செல்போன் மூலம் பேசி மீனவர்களை விடுவிப்பது குறித்தும் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் பேசினார்.இதை தொடர்ந்து மீனவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். மீனவர்கள் படும் அனைத்து கஷ்டத்தை முழுமையாக அறிந்தவன் நான். அதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மீனவர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீன்பிடிப்பதற்கும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் பேசி நடவடிக்கை எடுப்பேன். மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment