மற்றவர்கள் விமர்சிப்பது போல் விஜய் பாஜகவின் ஏ டீம், பி டீம், சி டீம் எல்லாம் கிடையாது. அவருக்கு முதல்வர் இருக்கை மீது பல வருடங்களாகவே ஒரு கண். “ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா... என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்பது அவருக்கு சினிமா வசனம் மட்டுமல்ல. அதுதான் அவரது இயற்கையான சுபாவமும்கூட. இந்த சுபாவம் தான் அவரை அப்பாவை விட்டும் விலக வைத்தது. ஆரம்பம் முதலே விஜயின் தனித்துவமே விடாமுயற்சியும், நினைச்ச வெற்றியை அடைவதற்கான உழைப்பும் தான் என்கிறார்கள் விஜயின் கல்லூரி நண்பர்கள்.விஷயம் விஜய் பெருமையைப் பற்றியதல்ல... வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பற்றியது. 2 கோடி உறுப்பினர்கள் என்கிற இலக்குடன் களமிறங்கி இருக்கிறது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். வித்தியாசமாக எதையாவது செய்வார் என்பதால் விஜய் கட்சி அறிவித்தது முதலே கோலிவுட் பிரபலங்கள் பலரும் அவருடன் நெருக்கம் பாராட்ட ஆரம்பித்தி ருக்கிறார்கள். ஒருசிலர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்கள். வெகுபலர் ரகசியமாக அவரை வாழ்த்தி இருக்கிறார்கள்.அவர்களின் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. விஜய் கட்சியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கும் தயாராக இருப்பதாக த்ரிஷா திருவாய் மலர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மாவட்ட வாரியாக த்ரிஷா சார்பாக மகளிர் உறுப்பினர்களை சேர்க்க இப்போதே ஆட்களை களமிறக்கும் வேலைகளும் நடப்பதாகச் சொல்லி அதிர வைக்கிறார்கள்.த்ரிஷாவுடன் நிற்கவில்லை... விஜய்க்குப் பின்னால் அணிவகுக்கும் கோடம்பாக்கத்து பிரபலங்களின் லிஸ்ட் இன்னும் பெரிதாக நீள்கிறது. இப்போது திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில் இருக்கும் நடிகர், நடிகைகள் கூட 2026 தேர்தலில் விஜய்க்காக பிரச்சாரக் களத்தில் நிற்பார்கள் பாருங்கள் என்கிறார்கள் கள நிலவரம் தெரிந்தவர்கள்.

0 Comments