கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் அக்கட்சியின் சார்பில் வேலூர் மாநகர முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் சார்பில் சந்திரகாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜான்சிராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சமுதாய நல்லிணக்க தொடர்பு அமைப்புத் தலைவர் குரு.சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் நேற்று இரவு சிதம்பரம் விளங்கியம்மன் கோயில் தெருவில் வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.இவற்றை அனுமதி பெறாமல் விநியோகிப்பதாகக் கூறி, அவர்களை அந்தப் பகுதி திமுகவினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்ததாகக் கூறப்படும் குரு.சுப்பிரமணியன், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் நகர்மன்ற திமுக உறுப்பினர் சி.க.ராஜன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலைத் தடுக்க முயன்ற தூய்மைப்பணியாளர் திலகவதியும் தாக்கப்பட்டதாக அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸார், துண்டுப் பிரசுரம் வழங்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 3 பேரையும் நகர காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். இந்த தகவல் அறிந்து பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். இன்னொரு பக்கம் திமுக, விசிகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் வழங்கியதுடன் தங்களைத் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
காவல் நிலையத்தின் எதிரே இந்த இரண்டுக் கூட்டணிகளை சேர்ந்தவர்களும் நூற்றுக்கணக்கில் திரண்டதால் அங்கு கலவர சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், துண்டுப் பிரசுரம் விநியோகித்ததற்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட மூவரையும் போலீஸார் விடுவித்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரு. சுப்ரமணியத்தை பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று வந்து பார்வையிட உள்ளதால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் சிதம்பரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

0 Comments