பணப்பட்டுவாடா புகார்..... கோவை மாநகராட்சி மண்டல தலைவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடவை தடுக்க, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது.அவ்வப்போது அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை சார்பில் இது போன்ற புகாரின் அடிப்படையில் நேரடியாக வீடுகளுக்கே சென்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டிலிருந்து பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக, கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மீனா லோகு வீட்டில் சோதனை நடத்தினர். மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
இருப்பினும் வீட்டிலிருந்த கார், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையில் நடந்த இந்த சோதனை காரணமாக திமுகவினரிடையே பரபரப்பு நிலவியது.
No comments