பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தபால் நிலைய அதிகாரிக்கு கத்திக்குத்து - MAKKAL NERAM

Breaking

Monday, July 22, 2024

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தபால் நிலைய அதிகாரிக்கு கத்திக்குத்து


 கோவை அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த 21 வயது பெண், கோவையில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் ஊழியர் நேற்று முன்தினம் மாலையில் அலுவலகத்தில் பார்சல் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அதே தபால் அலுவலகத்தில் பணிபுரியும் தபால் நிலைய அதிகாரியான சூலூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 44) என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென்று அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் கூச்சல்போட்டார்.

உடனே விஜயகுமார் தப்பி சென்று விட்டார். இது பற்றி அந்த பெண், தனது குடும்பத்தினரிடம் கூறி அழுது உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினரான உத்தமன், விஜயகுமாரை கத்தியால் குத்தினார். இதில் விஜயகுமார் காயம் அடைந்தார்.பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் ஊழியர் அளித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தபால் நிலைய அதிகாரி விஜயகுமாரை கைது செய்தனர்.

இதற்கிடையே கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விஜயகுமார் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் ஊழியரின் உறவினரான உத்தமனை (32) வலைவீசி தேடி வருகின்றனர். பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தபால் நிலைய அதிகாரியை அந்த பெண்ணின் உறவினர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment