கோவை மாநகராட்சி மேயர் திடீர் ராஜினாமா
திமுகவை சேர்ந்த கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கியுள்ளார் .உடல் நிலை காரணமாக தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கோவை மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. 19வது வார்டு கவுன்சிலரான கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திமுக கவுன்சிலர்களே மேயர் கல்பனா மீது அதிருப்தி தெரிவித்து வந்தனர். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.மேயர் கல்பனாவின் நடவடிக்கைகளால் அமைச்சர் கே.என்.நேரு, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. திமுக தலைமை இதுகுறித்து விசாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை மேயர் கல்பனா இன்று ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த மேயர் திடீரென பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமார், மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார். அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். கல்பனா ஆனந்தகுமார், அப்பகுதியில் இ -சேவை மையம் நடத்தி வந்தார்.கோவை மாநகராட்சி மேயர் ஆவதற்கு திமுகவின் முன்னணி நிர்வாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கல்பனாவுக்கு மேயர் பதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments