நிலச்சரிவு குறித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பொய் சொல்கிறார் - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்
சட்டவிரோத குடியிருப்புகள் மற்றும் சுரங்கங்களை அனுமதித்ததே காரணம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'கேரளாவின் வயநாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு உடைய பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகள், சுரங்கங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அங்கு உள்ள மண் பரப்பு, தாவர அமைப்பு போன்ற முக்கிய சுற்றுச்சூழல் காரணிகளை அலட்சியம் செய்து, மனித வாழ்விடங்களை அனுமதித்ததே பேரழிவுக்கு வழிவகுத்தது' என்றார்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. கேரளாவின் மலைப் பகுதியைப் பற்றி சிறிதளவு அறிவும், புரிதலும் உள்ளவர்கள் கூட அங்கு வசிக்கும் மக்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூற மாட்டார்கள். கேரள அரசுக்கு எதிராக விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்களை திரட்ட மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் செய்திகள், இவரது அறிக்கையின் வாயிலாக உண்மை தான் என்பது உறுதியாகிறது,” என்றார்.
No comments