3 பேரின் உயிரை பறித்தது கூகுள் மேப்பா...? நெடுஞ்சாலைத்துறையா....?
உத்தர பிரதேச மாநிலம், தாடாகஞ்ச் அருகே ஜி.பி.எஸ்., எனப்படும் டிஜிட்டல் வழிகாட்டும் வரைபடத்தை பயன்படுத்தி காரில் பயணித்த மூவர், உடைந்த பாலத்தில் இருந்து காருடன் ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்தனர்.உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியைச் சேர்ந்த மூவர், படவுன் மாவட்டம் தாடாகஞ்ச் பகுதிக்கு நேற்று காலை காரில் புறப்பட்டனர். வழி தெரியாது என்பதால் ஜி.பி.எஸ்., வரைபடத்தின் துணையுடன் பயணித்து உள்ளனர்.இவர்களது கார், நேற்று காலை 10:00 மணி அளவில் கரன்பூர் பகுதியில் உள்ள ராம்கங்கா ஆற்று பாலத்தில் சென்றது. அந்த பாலம் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதியாக உடைந்திருந்தது. இது ஜி.பி.எஸ்.,சில் காட்டாததால், அந்த பாலத்தின் மீது வேகமாக சென்றனர்.
உடைந்த பாலத்தின் முடிவில் தடுப்புகள் ஏதும் இல்லாததால்,50 அடி உயரத்தில் இருந்து ராம்கங்கா ஆற்றுக்குள், கார் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் செல்லாததால் கீழே விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இந்த சம்பவத்திற்கு பின், போலீசார் பாலத்தை மூடினர். இதற்கு முழு காரணம் நெடுஞ்சாலைத்துறை தான். அறிவிப்பு பலகையோ அல்லது அந்த சாலையை அடைத்து வைத்திருந்தாலோ இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
No comments