சபரிமலை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை..... இன்று மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது - MAKKAL NERAM

Breaking

Thursday, December 26, 2024

சபரிமலை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை..... இன்று மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது

 


கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். நவ.,16-ல் தொடங்கிய மண்டலகாலம் இன்று இரவு நிறைவு பெறுகிறது.

இன்று மதியம் நடைபெறும் மண்டல பூஜையின்போது அய்யப்பன் சிலையில் அணிவிக்க மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி டிச., 22ல் ஆரன்முளாவில் இருந்து பவனியாக புறப்பட்டது. நேற்று மதியம் பம்பை வந்தஇந்த பவனியை கேரள மாநில தேவசம் அமைச்சர் வாசவன் வரவேற்றார்.

பின்னர் கணபதி கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த அங்கியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். மாலை 3:00 மணிக்கு பெட்டகத்தில் அடைக்கப்பட்டு தலைச்சுமையாக கொண்டுவரப்பட்டது. இது, 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தது.பக்தர் கூட்டம் காரணமாக நேற்று மதியம் 1:00 மணிக்கு அடைக்க வேண்டிய நடை 2:00 மணிக்கு அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 5:00 மணிக்கு சபரிமலை நடை திறந்ததும்தந்திரி கண்டரரு பிரம்மதத்தன், அங்கியை வரவேற்கச் செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்தார்.இவர்கள் சரங்குத்தி சென்று அங்கியை வரவேற்று அழைத்து வந்தனர். மாலை 6:25 மணிக்கு அய்யப்பன் கோவில் முன் வந்த அங்கியை தந்திரி மற்றும் மேல் சாந்தி பெற்று நடை அடைத்து அய்யப்பன் சிலையில் அணிவித்தனர்.

பின்னர் 6:33க்கு நடை திறந்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அங்கி அணிவிக்கப்பட்ட அய்யப்பனை வணங்கினர்.

இன்று அதிகாலை நடை திறந்து நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் மதியம் 12:00 முதல் 12:30 மணிக்குள் தங்க அங்கிஅணிவித்து மண்டல பூஜை நடக்கிறது. தொடர்ந்து 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மதியம் 3:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகளுக்கு பின்னர் இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும். அதன் பின்னர் மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெறுகிறது.

No comments:

Post a Comment