• Breaking News

    மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும் அம்மாபட்டினம் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள்


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த  அம்மாபட்டினம் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையிலும் விடுமுறை விடப்படாததால் மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுதினார்கள். 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு  நாட்களாக பலத்த மழை பெய்ததால் அம்மாபட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மழையின் காரணமாக கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை விடுமுறை விடப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளியை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. சில வகுப்பறைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் இந்த பள்ளிக்கு விடுமுறை விடவில்லை.

     இதனால் மாணவர்கள் பெரும் அவதியுற்றனர். இது குறித்து தகவலறிந்த சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் ஷேக் அப்துல்லா, வட்டார கல்வி அலுவலர் செழியன், ஊராட்சி மன்ற தலைவர் அகமது தம்பி ஆகியோர் ஆய்வு செய்து மழை தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். உடன் தலைமை ஆசிரியர் சுந்தரராஜ் இருந்தார். பின்னர் மாணவர்கள் பாதுகாப்பான வகுப்பறைக்கு மாற்றப்பட்டு அரையாண்டு தேர்வு எழுதினர். 


    மாணவர்களுக்கு மதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டது. பிறகு தேங்கியுள்ள மழை நீரை அகற்றி டிராக்டர் மூலம் மண் நிரப்பப்பட்டு பாதைகளை சரி செய்தனர். இந்த பணியின் போது சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் ஷேக் அப்துல்லா, வட்டார கல்வி அலுவலர் செழியன், கிராம நிர்வாக அலுவலர் சொக்கையா ராஜா,  துணை தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், அரசமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    No comments