பழுதாகி நின்ற ரோடு ரோலரை திருடிய 3 பேர் கைது - MAKKAL NERAM

Breaking

Thursday, February 27, 2025

பழுதாகி நின்ற ரோடு ரோலரை திருடிய 3 பேர் கைது

 


சென்னை, செனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன், 31. இவர், சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு ரோடு ரோலர், மீஞ்சூர் பகுதியில் சாலைப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்டது.

பணிகள் முடிந்த கடந்த செப்டம்பர் 15ல், மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்வதற்காக, மீஞ்சூர் - வண்டலுார் வெளி வட்ட சாலை வழியாக சென்றது. சோழவரம் சுங்கச்சாவடி அருகே செல்லும், ரோடு ரோலர் பழுதானது.ரோடு ரோலரை யார் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில், டிரைவர் அங்கேயே விட்டுவிட்டு சென்றார். மாதக்கணக்கில் அந்த ரோடு ரோலர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த, 24ம் தேதி, வாகனத்தை சரி செய்து கொண்டு செல்வதற்காக தினகரன், மெக்கானிக்குடன் அங்கு வந்தார். ஆனால் அங்கிருந்த ரோடு ரோலரை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவர், சோழவரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுங்கச்சாவடி பகுதி, செங்குன்றம் சாலையிலும் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஐஷர் லாரி ஒன்றில், ரோடு ரோலர் ஏற்றிச் செல்லப்பட்டது தெரிந்தது.


அதையடுத்து, லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், 34, கோபிநாத், 52, வெங்கடேசன், 34, ஆகிய மூன்று பேர், ரோடு ரோலரை திருடியது தெரிந்தது.

நீண்ட காலமாக கேட்பாரற்று கிடந்ததால், கிரேன் உதவியுடன், ரோடு ரோலரை லாரியில் ஏற்றி, திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து, சோழவரம் போலீசார், மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரோடு ரோலர், லாரி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

No comments:

Post a Comment