பேராவூரணி: அரசு பள்ளி மாணவர்களிடம் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம்..... எச்சரித்து அனுப்பிய காவல்துறை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, களத்தூர் பகுதிகளில், நாகர்கோவில், கரூர் பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர், கடந்த சில நாட்களாக கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் மடத்திக்காடு பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வழங்கச் சென்றபோது, அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர், அவர்கள் களத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி முன்பு நின்றுகொண்டு, பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் அங்கு சென்று மதப் பிரச்சாரம் செய்த நபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். மேலும், அவர்களை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி, இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளமாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.அத்துடன், மதப் பிரச்சாரம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவின் தெற்கு மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் மனு அளித்தனர்.
No comments