தூத்துக்குடி: ரூ.1,000 லஞ்சம் வாங்கிய முன்னாள் துணை பத்திரப் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை - MAKKAL NERAM

Breaking

Saturday, March 1, 2025

தூத்துக்குடி: ரூ.1,000 லஞ்சம் வாங்கிய முன்னாள் துணை பத்திரப் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

 


தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ஜோதிமணி (47). இவர் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி தூத்துக்குடி மேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நிலம் விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக பதிவு செய்ய வந்துள்ளார். அங்கு, தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் துணைப் பதிவாளராக பணியாற்றி வந்தார். அவரிடம், விற்பனை ஒப்பந்த பதிவு தொடர்பாக பேசியபோது, அவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோதிமணி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின் பேரில், பத்திரப் பதிவுத் துறை துணைப் பதிவாளரிடம் ரூ.1,000 பணத்தை ஜோதிமணி நேரில் கொடுத்துள்ளார்.

 அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக சின்னத்தம்பியை பிடித்து கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் ஜென்சி ஆஜரானார். இதனிடையே, பணியில் இருந்து சின்னத் தம்பி ஓய்வு பெற்றார். தற்போது 74 வயதாகும் அவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment