44 வயது பெண்ணுடன் ஜோசியரை நிர்வாணமாக நிற்க வைத்து மிரட்டிய கும்பல்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 44 வயது மைமூனா என்ற பெண், சில ஆண்டுகளாக கூடலூரில் வசித்து வந்தார். சமீபத்தில், ஒரு பிரபல ஜோதிடரை சந்தித்து, தனது வீட்டில் உள்ள பிரச்சனைகளை நீக்க பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஜோதிடர் மைமூனா சொன்ன வீட்டிற்கு சென்றார். ஆனால், அந்த வீடு ரவுடி பிரதீஷ் (36) என்பவருக்கு சொந்தமானது. இதனை அறியாமல் ஜோதிடர் அங்கு சென்றார்.
அப்போது மைமூனா அவரை வரவேற்றார். அவருடன் சேர்த்து 9 பேர் அந்த வீட்டில் இருந்தனர். அதன்பிறகு, ரவுடி பிரதீஷ், ஜோதிடரை மிரட்டி தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை நிர்வாணப்படுத்தி, பக்கத்தில் மைமூனாவையும் நிற்க வைத்து ஆபாச புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி ஜோதிடரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளனர். மேலும், ஜோதிடரின் நாலரை பவுன் செயின், செல்போன் மற்றும் ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்தனர்.
அந்த சமயம் முக்கிய குற்றவாளியான பிரதிசை தேடி போலீசார் அங்கு வந்தனர். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தை பயன்படுத்தி ஜோதிடர் அங்கிருந்து உடைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதனையடுத்து தனக்கு நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஜோதிடரை மிரட்டிய ஸ்ரீஜேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளி பிரதீஷ் உள்பட 7 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments