பண்ணை வீட்டில் பிரபல டாக்டர் தற்கொலை.... சிக்கிய கடிதம்
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் பிரிவின் தலைவராக ஜார்ஜ் ஆபிரகாம் பணியாற்றி வந்தார்.
இவர், தன் சகோதரருடன் கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள தன் பண்ணை வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். அன்றிரவு, சகோதரர் சென்றபின், பண்ணை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீட்டில் சோதனையிட்டதில் டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. இதில் அவர், 'வயோதிகம் காரணமாக என் உடல் பலவீனம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக, என் மருத்துவ பணி பாதிக்கப்படுவதை உணர்கிறேன். டாக்டராக பணியாற்றுவதில் முழு திருப்தி ஏற்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, டாக்டர் ஜார்ஜ் ஆபிராமிற்கு கடன் தொல்லை ஏதும் இல்லை என்றும், தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினர் எந்த சந்தேகமும் இதுவரை எழுப்பவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற ஜார்ஜ் ஆபிரகாம், இதுவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
No comments