முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் பரிசீலனை
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டுவிழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வந்தார். கட்சியில் இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். செங்கோட்டையன் சந்திக்காமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க. தற்போது வரை ஒற்றுமையாகவும் பலமாகவும் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்ரு இரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய மந்திரி அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம் என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி வந்து மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சென்றுள்ளார். இதனை டெல்லி பா.ஜனதாவின் தமிழக பிரிவு நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து டெல்லி வந்தால் தகவல் உடனடியாக பரவிவிடும் என நினைத்து அவர் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து விமானத்தில் டெல்லி வந்துள்ளார். டெல்லியில் அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்துவிட்டு, அதேபோல யாருக்கும் தெரியாமல் தமிழகம் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் நேற்று காலையில்தான் தெரிய வந்தது.அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்து சென்ற நிலையில் செங்கோட்டையனும் தனியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. செங்கோட்டையன் சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விலகியே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அமித்ஷா, செங்கோட்டையனையும் தனியாக சந்திக்க காரணம் என்ன? என்பதுதான் கேள்வியாக இருந்து வந்தது.இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் கோரிக்கை அடிப்படையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை வழங்கி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு கடந்த மார்ச் 14ம் தேதி முதல் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments