தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன் - MAKKAL NERAM

Breaking

Friday, April 11, 2025

தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன்

 


தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜனதா தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜனதா மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை, மாநில துணைத்தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி வௌியிட்டார். இந்தநிலையில், பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் சென்னையிலுள்ள கமலாலயத்தில் தொடங்கியது. பாஜக தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் விருப்பமனு துவங்கிய நிலையில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார். நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.வானதி சீனிவாசன், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, பொன் பாலகணபதி உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர்.

இதற்கிடையில், நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, தமிழ்நாடு பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment