எல்லையில் பதற்றம்.... 27 விமான நிலையங்கள் இன்று மூடல்..... 400 விமானங்கள் ரத்து
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, அடுத்த உத்தரவு வரும் வரை, பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைய கூடிய 25 விமான வழிகள் மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இன்று 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பதிண்டா, ஹல்வாரா, பதான்கோட், பந்தர், சிம்லா, ஹாஹல், தரம்சாலா, கிஷன்ஹர், ஜெயசால்மர் உள்ளிட்ட 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தியா முழுவதும் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments