தனது வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்களுடன் ஜி.பி.முத்து வாக்குவாதம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 14, 2025

தனது வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்களுடன் ஜி.பி.முத்து வாக்குவாதம்



 டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இதனால் சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது புகழ் மேலும் அதிகரித்து சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கின.

இந்த நிலையில், நடிகர் ஜி.பி.முத்து தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், 'உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233-ல் கீழ தெரு இருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம். பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 20 வருடத்தில் அந்த தெரு காணாமல் போய்விட்டது' என்று அவர் கூறியுள்ளார்.

அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால், பொதுமக்களின் பாதை அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 'மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடன்குடி பெருமாள் புரத்தில் காணாமல் போன கீழதெருவை கண்டுபிடித்து தருமாறு' கலெக்டரிடம் ஜி.பி.முத்து கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாக ஜி.பி.முத்து எச்சரிக்கை விடுத்தார்.இதனை தொடர்ந்து, ஜி.பி.முத்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் கூறியிருந்தனர். இதனால் உடன்குடியில் உள்ள ஜி.பி.முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், ஆக்கிரமிப்பு பிரச்சினையில் தனது வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்களுடன் ஜி.பி.முத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது கிராம மக்கள் ஜி.பி.முத்து ஒழிக என கோஷமிட்டனர். இதற்கு ஜி.பி.முத்துவும் தனக்குத் தானே ஒழிக... ஒழிக என கோஷமிட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜி.பி.முத்துவையும், கிராம மக்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment