• Breaking News

    நாகை: பாசன ஆறு மற்றும் வாய்க்கால்களில் மண்டியிருக்கும் ஆகாய தாமரைகளால் காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல்...... உடனடியாக அகற்றி தர விவசாயிகள் கோரிக்கை......


    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். கோடை உளவு மற்றும் விளைநிலங்களை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


    மேலும்  தூர்வாரும் பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணி முழுமையாக மேற்கொள்ளவில்லையென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


     இதனால் அரிச்சந்திரா நதி மூலம் பாசன வசதி பெற்று பெரிய வாய்க்காலில் இருந்து  பாசன வசதி பெறும் சுமார் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முழுமையாக காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது‌.


    இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. கமல்ராம் கூறியதாவது:

    தலைஞாயிறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆலங்குடி,திருமாளம், அக்ரகாரம், பிரிஞ்சிமூலை, காடந்தேத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளது. இவற்றிற்கு பாசன நீரை பகிர்ந்து வழங்கக்கூடிய 15 க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை   அதுமட்டுமின்றி பல்வேறு பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை கால்வாய்களில் ஆகாய தாமரைகள் அதிக அளவில் மண்டி இருப்பதால் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

    தூர்வாரும் பணியை பார்வையிட  அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவும் முறையாக ஆய்வு பணியை மேற்கொள்ளவில்லை. விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை ஆகவே, போர்கால அடிப்படையில் பாசன வாய்க்கால்களில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி தர வேண்டும். இல்லையென்றால் இப்பகுதியில் குறுவை சாகுபடி என்பது கேள்விக்குறி ஆகிவிடும்.

    மேலும் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஏதுவான உழவு மானியம், விதை நெல் மற்றும் குறுவை  தொகுப்பு திட்டம்  அனைத்து தரப்பு விவசாயிகளுக்கு பாரபட்சம் இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும், குறிப்பாக பாரபட்சமின்றி  விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்


    No comments