காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில், இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய்ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' தள பதிவில், "பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. தேச நலன் கருதி நமது ராணுவத்திற்கு என்றும் துணை நிற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகளும், மல்லிகார்ஜுன கார்கே, ஓவைசி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த பதிலடி தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment