ஏற்காடு மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து..... 3 பேர் படுகாயம்

 


சேலம் மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 40). இவர் கோடை விழாவையொட்டி ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். கோடை விழா முடிந்த பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனிடையே நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சேர்வராயன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

இதனால் ஒண்டிக்கடை பகுதியில் உள்ள ஜூஸ் கடையை சேர்வராயன் கோவிலுக்கு மாற்றுவதற்காக சந்திரசேகர் நேற்று காலை சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சரக்கு வேனில் வந்தார். இந்த வேனை அன்னதானப்பட்டியை சேர்ந்த அல்லிமுத்து மகன் ஹரிஹரன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். இவர்களுடன் ராசிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (40) நடராஜன் (40) ஆகியோரும் வந்தனர்.

ஏற்காடு மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசிவளைவை கடந்து சென்றபோது தனியார் பஸ்சை, வேன் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சந்திரசேகர், முருகேசன், நடராஜன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். டிரைவர் லேசான காயம் அடைந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபபட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீசார் விரைந்து வந்து கவிழ்ந்த சரக்கு வேனை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments