டிஎன்பிஎல் போட்டியில் பந்தை சேதப்படுத்திய அஸ்வின்.? மதுரை பேந்தர்ஸ் அணி புகார்.....
டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது சியாசெம் மதுரை பேந்தர்ஸ் அணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு சியாசெம் மதுரை பேந்தர்ஸ் அணி புகார் ஒன்றை கொடுத்துள்ளது.
அதில் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை வெளிப்படையாகவே சேதப்படுத்தியதாகவும்.
அதற்கு ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பந்து கல்லைப் போல் கடுமையாக இருந்ததாகவும்...பேட்ஸ்மேன்களால் அடிக்கப்படும்போது உலோகத்தில் அடிப்பதைப்போல ஒலியெழுப்பியதாகவும்,
சந்தேகத்தின் பேரில் அந்த அணியினர் பயன்படுத்திய டவல்களை எங்கள் அணியினர் ஆய்வு செய்தபோது
அவர்கள் கெமிக்கல் பயன்படுத்தியதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் தங்கள் அணியை மனசோர்வடைய செய்ததாகவும் மதுரை பேந்தர்ஸ் அணி தனது புகாரில் தெரிவித்துள்ளது.பந்து வீச்சாளர்கள் பந்தை சேதப்படுத்த பயன்படுத்திய சாத்தியக்கூறுகள் குறித்து தங்கள் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து வரும் நிலையில் விரிவான அறிக்கை வழங்கப்படும் எனவும்,
கிடைத்துள்ள சான்றுகள், பந்துகளை சேதப்படுத்த முன்கூட்டியே திட்டமிடப்பட்டதற்கான சந்தேகத்தை அதிகரிப்பதாகவும்,
பவர்பிளேயின் போது பந்து சரியாக இருந்ததை தங்கள் ஸ்கோரே பிரதிபலிக்கும் நிலையில், போட்டி அடுத்தகட்டத்திற்கு செல்லும்போது பந்தில் இருந்து உலோக ஒலி உண்டானதாகவும்,
இது குறித்து பலமுறை எச்சரித்த போதிலும் நடுவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின், மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை பேந்தர்ஸ் அணி வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஆட்டத்தின்போது திண்டுக்கல் டிராகன்சுக்கு வழங்கப்பட்ட புள்ளிகளை தங்கள் அணிக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments