நாளை நடைபெற உள்ள யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் உடல் நலன் குறித்து பேசி வருகிறார். அப்படி, 2014ம் ஆண்டு ஐ.நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளத்த நிலையில், 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ. நா சபை அறிவித்தது.
சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த பண்டைய நடைமுறையை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்று கொள்ள ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினம் நோக்கமாக கொண்டுள்ளது. 11வது சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாப்பட உள்ளது.இதனை ஒட்டி நாளை நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்தநிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை ஆந்திராவில் நடைபெற உள்ள யோகாதின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 6:30 மணி முதல் காலை 8:00 மணி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு,கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டிஜிபி குப்தா கூறியுள்ளார்.
No comments