டீ,பன் கொடுத்து ஏமாற்றிவிட முடியாது..... திருமாவளவன் காட்டம்
சட்டமன்றத் தேர்தலில் தங்களை டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருநீறை அழித்தது குறித்து பேசுபவர்கள் தன்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், புண்ணியம் கிடைக்கும் என்ற நோக்கில் திருநீறு பூசவில்லை. அதனை அவமதிக்கும் நோக்கில் அழிக்கவும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை தக்க வைத்திருப்பதோடு, கூடுதலாக மக்கள் நீதி மய்யம் கட்சியையும் இணைத்திருக்கிறது. வரும் நாட்களில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.அதேபோல் திமுக கூட்டணியை பொறுத்தவரை விசிக முக்கிய அங்கமாக உள்ளது. அதிமுக, பாஜக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் விசிகவை தொடர்ச்சியாக அழைத்து வருகின்றன. இதன் காரணமாக திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் திருமாவளவனும் இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்.
இந்த நிலையில் சென்னையில் விசிக சார்பாக விருது விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் திருமாவளவன் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் விசிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்று மீண்டும் மீண்டும் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறுத்தைகளையும், திருமாவளவனையும் மதிப்பிட தெரியவில்லை. விசிகவை சராசரி இயக்கவாதிகளாக பார்க்கிறார்கள்.
அவர்களின் கேள்வியை நினைத்து பரிதாபமாக உள்ளாது. எங்களை டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிட முடியாது. 6 முதல் 8 தொகுதிகளை கொடுத்தோம்.. அதற்கு மேல் அவர்களுக்கு சீட் கொடுத்து ஊக்குவிக்கவில்லை.. நாங்கள் அவர்களுக்கு 10 சீட்டுகளுக்கு மேல் எப்போதும் தர மாட்டோம் என்பது உங்களின் மதிப்பீடுகள் தான். எங்களை பொறுத்தவரை நாங்கள் 234 தொகுதிகளுக்கும் இணையானவர்கள். எங்களுக்கு வலிமை உண்டு.
இதனை ஆணவத்தில் சொல்லவில்லை. தேர்தல் கணக்கிலும் சொல்லவில்லை. சமூக மாற்றத்திற்கான அடிப்படை பார்வையில் இருந்து கூறுகிறேன். அதேபோல் நமது இயக்கம் சட்டமன்றம், நாடாளுமன்ற சீட்டு பேரங்களுக்காக இல்லை. ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கூட அறிவிக்கக்கூடும். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிளாஸ்டிக் சேர் அல்லது தரையில் கூட அமர தயங்க மாட்டேன்.திருநீறை அழித்தது குறித்து பேசுபவர்கள் தன்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா? புண்ணியம் கிடைக்கும் என்ற நோக்கில் திருநீறு பூசவில்லை. அதனை அவமதிக்கும் நோக்கில் அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியாராக மாற்ற வேண்டும். சகோதரனாக ஏற்றுக் கொள்ளவே கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments