• Breaking News

    ஆன்லைன் ரம்மிக்கு தடை..... டாஸ்மாக் கடையை மட்டும் தடை செய்யாதது ஏன்..? ஐகோர்ட் கேள்வி

     


    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட நிலையில், அதைவிடவும் பொதுசுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை ஏன் அரசு தடை செய்யவில்லை என்பது குறித்து கடும் கேள்வி எழுப்பியுள்ளது.

    மதுரை கீழக்குயில்குடி பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை குறைவாக இருப்பதால், அதனை கைத்தீர் நகர் பகுதியில் மாற்ற அரசு முயற்சி எடுத்தது. இதற்கும் விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மனமகிழ் மன்றங்களைத் திறக்க அரசு திட்டமிட்டது. இந்த முயற்சிகளுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    இந்த மனுக்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மதியழகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகிய அரசு வழக்கறிஞர், “அரசு யாரையும் மதுபானம் வாங்க கட்டாயப்படுத்தவில்லை. டாஸ்மாக் கடைகள் சட்டப்படி இயங்குகின்றன. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் 30 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வகை செய்ய, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி மூலம் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் பொதுசுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்தால் அரசே தடை விதித்தது. அதேபோல் டாஸ்மாக் மூலமும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது ஏன் பொதுசுகாதாரம் ஆகாது? டாஸ்மாக் விற்பனையை ஊக்குவிக்கிறீர்களா?” என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அரசு, “ஊக்குவிப்பது இல்லை. கட்டுப்பாடுகளுடன் விற்பனை நடைபெறுகிறது. மேலும் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும்” என தெரிவித்தது.

    மேலும், நீதிபதிகள், “மக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை தொடக்க கூடாது. அதையும் மீறி திறக்க முயற்சி செய்வது அரசியலமைப்பிற்கு எதிரான செயல். இன்று மாணவர்கள் வன்முறை படங்கள், சமூகச் சூழல் ஆகியவற்றால் சிக்கி தவிக்கிறார்கள். இதுபோன்று இரட்டை நிலைப்பாடுகள் ஏன்?” எனக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இது தொடர்பான விசாரணையை தொடர்வதற்காக நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

    No comments