வருவாய் கோட்டாட்சியர் என ஏமாற்றி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண்
நாமக்கல் மாவட்டம் பெரியமணலியை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 29). இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமாவரம்புதூர் பகுதியை சேர்ந்த தன்வர்தினி(வயது 27) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது தன்வர்தினி பொள்ளாச்சியில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். திருமணம் முடிந்த பிறகு நவீன்குமார் வங்கி பணிக்காக கோவை சென்ற நிலையில், தன்வர்தினி பொள்ளாச்சிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். வார விடுமுறை நாட்களில் இருவரும் வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நவீன்குமாரின் உறவினர் ஒருவர் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஒரு வேலையாக சென்றபோது, தன்வர்தினி குறித்து விசாரித்துள்ளார். அப்போது அப்படி யாரும் அங்கு வேலை செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த நவீன்குமாரின் குடும்பத்தினர், தன்வர்தினி குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
இது குறித்து தன்வர்தினியிடம் கேட்டபோது, தன்னை சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டதாக நவீன்குமாரிடம் கூறியுள்ளார். இருப்பினும் சந்தேகம் தீராத நிலையில், நவீன்குமார் உடனடியாக சென்னைக்கு கிளம்பிச் சென்றுள்ளார். சென்னை தலைமை செயலகம் வரை நேரில் சென்றும், தன்வர்தினி வேலை செய்வதாக கூறிய இடத்திற்கு நவீன்குமாரால் செல்ல முடியவில்லை.இதையடுத்து தன்வர்தினி தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சான்றிதழ்களை நவீன்குமார் சோதனை செய்துள்ளார். அப்போதுதான் அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழக அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக தன்வர்தினி மற்றும் அவரது பெற்றோர் மீது நவீன்குமார் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், வருவாய் கோட்டாட்சியர் என்று கூறி நவீன்குமாரை தன்வர்தினி ஏமாற்றி திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தன்வர்தினி 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். சென்னையில் சிவில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, குரூப்-1 தேர்வு எழுதிய அவர், நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வியடைந்துள்ளார்.
இந்த நிலையில்தான் நவீன்குமாருடன் தன்வர்தினிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. அந்த சமயத்தில் தன்வர்தினியிடம் ஒரு நபர் பணம் வாங்கிக்கொண்டு அரசுப் பணி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறியதாகவும், அதனை நம்பி தன்வர்தினியின் குடும்பத்தினர் அவர் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருவதாக நவீன்குமாரின் குடும்பத்தினரிடம் கூறி திருமணம் செய்து வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து தன்வர்தினி பொய் கூறி வந்துள்ளார். இந்த நிலையில்தான் நவீன்குமார் சுமார் ஒரு ஆண்டிற்கு பிறகு உண்மையை கண்டறிந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தன்வர்தினியை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.
No comments