• Breaking News

    திருமண ஆசைக்காட்டி 11 பேரை மோசடி செய்த இளம்பெண் கைது

     


    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர் பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம். இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்தநிலையில் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.

    அப்போது சிவசண்முகத்திற்கு திருமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் முடிக்காடு பகுதியை சேர்ந்த பெண் புரோக்கரான கந்தசாமி என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி (45) அறிமுகமானார். இவர் மூலம் மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர்கள் நாராயணன் என்கிற சங்கர், வேல்முருகன்,முத்துலட்சுமி,கஸ்தூரி, பாண்டி ஆகியோர் சிவசண்முகத்திற்கு அறிமுகமானார்கள்.

    அப்போது அவர்கள் 2-வது திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதற்கு ரூ.4 லட்சம் புரோக்கர் கமிஷனாக பேசியுள்ளனர். அதன்படி சிவசண்முகம் அவர்களுக்கு முதல் தவணையாக ரூ.1.20 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட புரோக்கர்கள் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் தீபா (வயது 24) என்பவரை காட்டி 2-வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து கடந்த 7-ம் தேதி சிவசண்முகம், தீபா திருமணத்தை மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கோவிலில் நடத்தி வைத்தனர். பின்னர் சிவசண்முகம் மனைவியுடன் சொந்த ஊரான வடகரையாத்தூருக்கு வந்தார். மறுநாள் 8-ம் தேதி சிவசண்முகம், தீபா ஆகியோர் அங்கேயே இரவு தங்கினர். மறுநாள் 9-ம் தேதி அதிகாலை சிவசண்முகத்தின் புது மனைவி தீபா வீட்டில் இருந்த நகை, வெள்ளி,கொலுசு, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களுடன் மாயமானார். இதனையடுத்து சிவசண்முகம் தீபாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் புரோக்கர்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசண்முகம் தாம் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்ததும் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து நல்லூர் போலீசில் சிவசண்முகம் உறவின் புகார் செய்தனர். புகாரின் பேரில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி சென்ற பெண் மற்றும் புரோக்கர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளம்பெண் தீபா மற்றும் புரோக்கர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சிவசண்முகத்தை விட்டு ஓட்டம் பிடித்த இளம்பெண் தீபா மற்றும் புரோக்கர்கள் தமிழ்ச்செல்வி (45) திருச்சியை சேர்ந்த நாராயணன் என்கிற சங்கர் (54) தூத்துக்குடி புதூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (55) திருப்புவனம் அருகே கீழடியை சேந்த திருத்தணி என்பவரது மனைவி முத்துலட்சுமி (45) சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி கஸ்தூரி பாண்டி (38) ஆகிய 6 பேரை கைது விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    சிவசண்முகத்தை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட தீபாவின் உண்மையான பெயர் ஜோதி மணி. இவர் மதுரை பட்டத்து பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் சிவசண்முகத்தை திருமணம் செய்து 3 நாட்கள் மனைவியாக நடிப்பதற்காக புரோக்கர்களிடம் ரு.30 ஆயிரம் பேரம் பேசி பெற்றுள்ளார். அதன்படி பணத்தை பெற்றுக்கொண்டு சிவசண்முகத்தை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

    மேலும் இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 11க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்துகொள்வதாக ஆசைக்காட்டி அவர்களிடம் இருந்து நகை, பணம் பறித்து மோசடி செய்ததும் தெரிய வந்தது. இவரின் ஆசைவார்த்தைக்கு மயங்கிய பல ஆண்கள் சபலத்தில் நகை, பணத்தை இழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11க்கும் மேற்பட்டோரை மோசடி செய்து ஏமாற்றிய இளம்பெண் ஜோதிமணி மற்றும் புரோக்கர்கள் 6 பேரையும் போலீசார் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    No comments