• Breaking News

    அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்..... ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு.....

     


    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்குமாரை அழைத்துச்சென்ற போலீசார், கடந்த மாதம் 28ம் தேதி அவரை அடித்துக்கொன்றனர்.

    இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அஜித்குமாரை அடித்துக்கொன்ற 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் அடிப்படையில் ஐகோர்ட்டு மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில், உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இதுவரை என்ன உதவி செய்துள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அஜித்குமார் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரண நிதியாக 7.50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது' என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என கூறினர். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரு. 25 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்' என்றனர். மேலும், இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    No comments