• Breaking News

    புதுக்கோட்டை: ரூ.40 ஆயிரம் பண பிரச்சினை..... அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை.... 7 பேர் சரண்


     புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜர் நகரை சேர்ந்த காத்தமுத்து மகன் கண்ணன் (வயது 32). இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு தருனிகா (10), நீத்திகா (7) ஆகிய 2 மகள்களும், சக்தி சிவன் (3) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கண்ணன் தனது நண்பர்கள் சிலருடன் அடியார்குளம் படித்துரையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தினார். பின்னர் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து கண்ணனின் தம்பி கார்த்திக் (27) அங்கு வந்து தனது அண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் சிலர் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் அவர்களை தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் கார்த்திக்கையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த கண்ணன், கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


    இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற இரட்டைக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக காமராஜர் நகரை சேர்ந்த காளிதாஸ், முத்துப்பேட்டையை சேர்ந்த யஸ்வந்த், எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், பஞ்சாத்தியை சேர்ந்த அய்யப்பன், சமத்துவபுரத்தை சேர்ந்த சத்திய சேகரன், சதீஷ்குமார், ராமநாதபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆகிய 7 பேர் நாகுடி போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    No comments